Ad Widget

இலங்கையில் 1115 மரண தண்டனைக் கைதிகள்

இலங்கை சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்றம் அனுமதி வழங்கினால் அடுத்த ஆண்டுமுதல் மரண தண்டனையை அமுல்படுத்தத் தாம் தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.

மரண தணடனையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தால் முன்று மாதங்களுக்குள் அதனை நிறைவேற்றத் தயாரென சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதன்படி இரண்டு தூக்குத் தூக்கிகளை சேவையில் இணைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகக் கூறிய அவர், அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்க முடியாதென்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் டாக்டர் பிரதிபா மகாநா ஹேவா தெரிவத்தார்.

“மரணதண்டனையை அமுல்படுத்துவதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்க முடியாதென்பதே எனது கருத்து. தற்போது குற்றச் செயல்களைப் புரியும் நபர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புக்கள் பாரிய அளவில் காணப்படுகின்றது. அதேபோன்று நிரபராதிகள் நீதிமன்றங்களுடாக தண்டனைக்குள்ளாகும் சம்பவங்களும் காணப்படுவதாக”, கூறிய டாக்டர் பிரதிபா மகாநாம ஹேவா குற்றம் புரிந்த நபர்கள் தப்பித்து நிரபராதிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அது அநீதியானதே என்றும் கூறினார்.

எனவே குற்றச்செயல்களை தடுக்க வேண்டுமானால் கலாச்சார மற்றும் மனிதாபிமான ரீதியில் மக்களின் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களின் முலம் மாத்திரமே அதனைக் குறைக்க முடியுமென்றும் கூறிய அவர் மரணதண்டனை மூலம் அதனை நூற்றுக்கு நூறு குறைக்க முடியாதென்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா, சீனா போன்ற பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடுகளில் கூட மரணதண்டனை அமுல்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்டபோது, “அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டாலும் கூட அந்த நாடுகளில் குற்றச்செயல்கள் குறையவில்ல என்று கூறிய டாக்டர் பிரதிபா மகாநாம ஹேவா, ஐநாவின் சிவில் மற்றும் அரசியல் சாசனத்திற்கு அமைய மரண தண்டனையை அமுல்படுத்த அவகாசம் இல்லை என்று கூறினார்.

இதன் காரணமாகவே மரணதண்டனையை இரத்துச் செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் சம்பந்தமாக எமது நாடு சர்வதேச ரீதியில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மரணதண்டனை மீண்டும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டால் மேலும் இக்கட்டான நிலை தோன்றுமென்றும் அவர் எச்சரித்தார்.

Related Posts