Ad Widget

இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை!: சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லையென சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் இலங்கையில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான பிராஜ் பட்நாயக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கொழும்பு கல்கிஸை பகுதியில் ஐ.நா பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் கவனிப்பில் தங்கியிருந்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது கடும்போக்கு பௌத்த பிரிவினர் தாக்குதல் நடத்தியமை மற்றும் கடந்த நவம்பரில் காலி கிங்தோட்டை பகுதியில் சிங்கள முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களும் மற்றும் சில வீடுகளும் இனவாதக் குழுவினரால் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை தென்னாசிய நாடுகளில் சிறுபான்மையின பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தவர்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அந்த அறிக்கை இலங்கை மட்டுமன்றி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இந்நிலைமை காணப்படுவதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts