Ad Widget

இலங்கையில் தமிழ் பிக்குகள் 11 பேர் உள்ளனர்

இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் 22,254 பேர் உள்ளனர். அதில், 11 பேர் தமிழ் பிக்குகளாவர் என்று, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆற்றுப்படுத்தப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பௌத்தர்கள், தமிழ் பிக்குமார்களின் உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய கேள்வியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேற்றைய நேரத்தின் போது கேட்டிருந்தார்.

இக்கேள்விகான பதிலை, வெகுசன ஊடத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, மன்றில் ஆற்றுப்படுத்தினார். அந்தப் பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் 22,254 பேர் உள்ளனர். அதில், வடமாகாணத்தில் மட்டும் 470 பேர் இருக்கின்றனர். இதேவேளை, தமிழ் பிக்குகள் 11 பேர் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில், தமிழ் பௌத்த மக்களுக்கு தமது சமய நடவடிக்கைகளில் ஈடுபடவும் அறநெறிக் கல்வியைப் பெறவும், ஸ்ரீ நந்தா ராம என்ற பெயரில் அறநெறிப் பாடசாலையொன்று இருந்தது. அது, பௌத்த திணைக்களத்தில் 2013.01.07ஆம் திகதியன்று பதியப்பட்டதுடன் 80 மாணவர்கள் கற்றனர். அந்த அறநெறிப் பாடசாலைக்கு, நிலையான இடமொன்று இன்மையால், அது கைவிடப்பட்டுவிட்டது.

நிலையான இடமொன்று கிடைத்தவுடன், அந்த அறநெறிப் பாடசாலையைத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள், இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தினால், 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Related Posts