Ad Widget

இலங்கையில் எப்போது நல்லிணக்கம் இருந்தது? – சிவாஜிலிங்கம்

சிங்கள தேசம் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?’ என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சிவாஜிலிங்கம், ‘இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 67 வருடங்கள் ஆகின்றது. ஆனால் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அரைகுறை தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகக்குறைந்த தீர்வாக சமஷ்டி தீர்வு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாகவுள்ளோம். எமது பிரச்சினைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல் நல்லிணக்கம் பற்றி கதைக்கின்றார்கள்’ என்றார்.

‘பெரும்பான்மையினருக்கு பாவமன்னிப்பு வழங்குவதா? இல்லையா என்று தமிழினம் தான் முடிவெடுக்க வேண்டும். இதில் குறுக்கிட்டு செயற்படும் தரகர்கள் தேவையில்லை. தமிழ் மக்களின் தலைவிதியை விளையாட்டாக நினைத்து சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த விடயத்தில் தரகர்களாக செயற்படுகின்றன. இவர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சார்ந்த ஒரு சிலரும் செயற்படுகின்றனர்.

தரகர்களை நம்பி அரைகுறை தீர்வை முன்னெடுப்பதை நிறுத்த வேண்டும். தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பான பிழையான செய்தியை உலகுக்கு காட்டவேண்டாம். சமஷ்டியை ஆகக்குறைந்த தீர்வாக ஏற்போம். இல்லையென்றால் சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என நாங்கள் கோரும் காலம் விரைவில் ஏற்படும்’ என்றார்.

Related Posts