Ad Widget

இலங்கையில் இரத்த ஆறு ஓடவேண்டும் என சிலர் விரும்புவதாக மைத்திரி குற்றச்சாட்டு

நாட்டில் மீண்டுமொரு இரத்தகளரி உருவாக வேண்டும் என்று சிலர் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாடு, தேசிய சகவாழ்வு மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் கலந்து சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசியல் தீர்வை முன்வைப்பது தேசத்துரோக நடவடிக்கையல்ல என்றும், கூறினார்.

இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

‘தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசு வகுத்து வரும் பொறிமுறை குறித்து சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. கடந்தகால சம்பவங்களை உதாரணம்காட்டி தீர்வுத்திட்ட முயற்சியை குழப்பிடியக்க சிலர் முற்படுகின்றனர். அதை கொச்சசைப்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.

நாட்டில் மீண்டுமொரு இரத்தகளரி உருவாக வேண்டும் என்பதே இவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண் பதற்காக சகல கட்சிகளையும், புத்திஜீவிகளையும் வட்ட மேசை கலந்துரையாடலுக்கு வருமாறு அழைக்கின்றேன்.

பல்லின சமூகங்களும் வாழும் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதுகூட பாரியதொரு அனர்த்தமாகும். அதை அந்தகோணத்திலேயே பார்க்க வேண்டும். உலகில் இன, மத,மொழி பிரச்சினை இருந்துவருகிறது.

புதிய அரசமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த அரசு முயற்சிப்பதாக மாநாயக்க தேரர்கள் மத்தியில் சென்று தவறான கருத்தை பரப்புகின்றனர். பௌத்த மதத்திற்குரிய முதன்மை அந்தஸ்த்தை நீக்கப்போவதாகவும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். சிங்கள மக்கள் மத்தியிலும் வெளிநாடுகளில் வாழும் சிங்கவர்களிடமும் இதே கருத்துதான் கொண்டுச்செல்லப்படுகின்றது.

அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதற்கும் கடந்த காலத்தில் இந்த பிரச்சினையை பயன்படுத்திய சில தலைவர்கள் இன்று எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வரும் எதிர்பார்ப்புடனான குறுகிய அரசியல் நோக்கத்திற்காக, பிரச்சினையை தீர்ப்பதற்கான தற்போதைய அரசின் உண்மையான முயற்சிகளை எந்தவொரு அடிப்படை ஆதாரங்களுமின்றி பொய்யான வார்த்தைகளை பயன்படுத்தி குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.

இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல் போகும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு அவர்களே பொறுப்புக்கூரவேண்டும். அரசியலமைப்பின் ஊடாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் சகல தரப்பினருக்கும் நியாயபூர்வமானதுமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கே நாம் செயற்பட்டு வருகிறோம்.

புதிய அரசமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு முன்வைக்கப்படும் போது, அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொதுவான அபிப்பிராயமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக சகல தரப்பினையும் ஒன்றிணையுமாறும், வட்டமேசை பேச்சுக்கு வருமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.’ என்றும் கூறினார்.

Related Posts