Ad Widget

இலங்கையில் இரண்டு தேசங்கள் உள்ளன

ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம். ஆனால் ஓர் இலங்கைக்குள் வாழ இயலாது. ஏன் என்றால் சிங்கள் தேசம், தமிழ் தேசம் என்று இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் காணப்படுகின்றன என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவருமான ஆ.இராசகுமாரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

rasakumaran

மாற்றம் அமைப்பின் ஏற்பாட்டிலான இளைஞர் மாநாடு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மாற்றம் அமைப்பின் தலைவர் உரையாற்றும் போது இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் தற்போது நாட்டில் சிங்கள தேசம், தமிழ் தேசம் என்று இரண்டு தேசங்கள் உள்ளன. இந்நிலையில் ஒன்றாக முடியாது.

இந்த அமைப்பானது அரசியல் தலையீடற்ற தனி இளைஞர் அமைப்பு என்று கூறப்படுகின்றது. இது உண்மையென்றால் அது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் இது அரசியல் சார்பானதா? இல்லையா? என்பது காலப்போக்கிலே உணரமுடியும்.

மாற்றம் என்பது உண்மையில் இளைஞர்களால் ஏற்படுத்தப்பட வேண்டியது. சரியாக சிந்திப்பவர்களே சிறந்த அரசை நடத்த முடியும். இங்குள்ள அரசியல்வாதிகள் உழுத்துபோய் உள்ளனர். எம்மவர்களில் பல கல்விமான்கள் உருவாக வேண்டும். மாற்றம் என்பது கல்வியிலிருந்து செய்யப்படவேண்டும்.

அவ்வாறு கல்வியில் மாற்றம் செய்வதன் மூலம் சிறந்த பிரஜைகளை உருவாக்க முடியும். இதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த மாற்றதை நோக்கி செல்லலாம்.

கல்வியின் மாற்றம் ஆரம்ப கல்வியிலிருந்து செயற்பட வேண்டும். தற்போது பிள்ளைகளுக்கு தேவையில்லா விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் சுமை அதிகரிக்கின்றது. சீரான கல்வியை தொடர மாற்றம் ஏற்படவேண்டும். அதற்கு இந்த அமைப்பின் இளைஞர்கள் செயற்படவேண்டும்.

யுத்த முடிந்து பல வருடங்கள் கடந்த நிலையில், தற்போதும் இளைஞர்கள் முகாம்களிலும் இடம்பெயர்ந்தும் வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்களால் எவ்வாறு தமது கல்வியை தொடர முடியும். இவை மாற்றப்படவேண்டும்.

வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அதற்கு ஏற்றவகையில் அரசு மாற்றம் பெற்றது. ஆனால் ஆட்சிக்கு வந்த அரசு கூறிய எதையும் செய்யவில்லை. மீண்டும் எம்மை ஏமாற்றுகிறார்களா என்ற எண்ணம் எழுகின்றது. இதுவரையில் எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்த நாம் இனியும் ஏமாற இடமளிக்கக்கூடாது.

புதிய அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். குறிப்பாக ஆரம்ப கல்வியில் மாற்றம் செய்யப்படவேண்டும். பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யவேண்டும். இளைஞர் பங்கு இருக்க வேண்டும். அதற்கு முதலில் இளைஞர்கள் உரக்க குரல்குடுக்க தயாராக வேண்டும் என்றார்.

Related Posts