Ad Widget

இலங்கையிலுள்ள அகதிகளுக்கு நோர்வே ரூ. 1.1 பில்லியன் உதவி

இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ள அகதிகளுக்கு, ஏறத்தாழ 1.15 பில்லியன் ரூபாயை (65 மில்லியன் குரோனர்) வழங்குவதற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில், நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் போர்கே பிரென்டே தெரிவித்தார்.

இந்த உதவி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக (யு.என்.டி.பி) வழங்கப்படும் எனவும், உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்போரை மீளக்குடியமர்த்தவும் அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் இப்பணம் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடு தொடர்பிலும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ்ப் பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு நோர்வேயின் உதவி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவியாக, ஐந்து மில்லியன் குரோனர்களை, இலங்கைக்கு நோர்வே அண்மையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts