Ad Widget

இலங்கையின் மிகவும் ஏழ்மையான மாவட்டம் முல்லைத்தீவு

இலங்கையின் பல பகுதிகள் இன்னும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளன என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண கூடுதல் வாய்ப்புகளும் உள்ளன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தெற்காசியாவின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுள்ள மனித வளமும் உள்ளன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடங்கப்பட்டிருக்கும் அரச நிர்வாக சீர் திருத்தங்கள் மேலும் பொறுப்பு கூறுதலுக்கு வழிவகுத்து சிறந்த நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்றும் அதன் மூலமே மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை ஏற்பட்டு, ஸ்திரத்தன்மை உறுதிசெய்யப்படும் எனவும் உலக வங்கியின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

வளமான நிலங்களும், அபரிமிதமான நீர் வளங்களும் இலங்கையில் இருப்பதால் விவாசாயத்துறை மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்றும், இலங்கை கடற்பரப்பில் கடல் வளங்களும் அதிக அளவில் உள்ளன எனவும் கூறும் அந்த அறிக்கை, அத்தகைய வளங்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு ஆக்கப்பூர்வமாக முனைய வேண்டும் எனக் கூறியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப உரிமைகளைப் பெற்று பயன்படுத்துவதில் இலங்கை மிகவும் பின்தங்கியுள்ளது எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான விஷயங்களில் அரசு துரிதகதியில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதன் மூலம், நாட்டை வளப்படுத்தி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வாய்ப்புகள் ஏற்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொழில் தொடங்க முனைவோர்கள் ஏகப்பட்ட நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனவும் உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

நாட்டில் சட்டம் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்துவதில் பிராந்திய ரீதியிலான ஏற்ற இறக்கங்களும் சமச்சீர் அற்ற நிலையியும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனக் கூறும் உலக வங்கி, அதிலும் குறிப்பாக இப்படியான காரணத்தால் நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள 40 சதவீதம் மக்கள் வசிக்கும் வட மாகாணம் போன்றவை கூடுதலாக பாதிப்படைகின்றன எனக் கூறுகிறது.

அவ்வகையில் நாட்டிலேயே மிகவும் வறுமை மிகுந்த மாவட்டங்களாக முல்லைத்தீவும் மன்னாரும் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதியில் போரின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், மலையகப் பகுதியிலுள்ள மக்கள் பல தசாபதங்களாக வறுமையின் பிடியில் வாடி வருகின்றனர் எனக் கூறும் உலக வங்கி, அந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட்டால் மட்டுமே தேசிய அளவில் பொருளாதாரம் மேம்படும் என ஆழமாக வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசு தனது வர்த்தகம் தொடர்பான கொள்கைகளை மாற்ற வேண்டும், கல்வி மற்றும் பயிற்சிகளை அளிப்பதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்றும் இவை இரண்டு இடம்பெற்றால் மட்டுமே மேம்பட்ட உற்பத்தி திறன் கிடைக்கும் என்பது உட்பட உலக வங்கி பல பரிந்துரைகளை வைத்துள்ளது.

Related Posts