Ad Widget

இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது!

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 15 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் வலப்பிட்டிய, எல்பிட்டிய, மொறவக்க மற்றும் திஸ்ஸமகராம போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என்றும் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மன்னார் மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Related Posts