Ad Widget

இலங்கையின் சனத்தொகையில் 23 சதவீதம் முதியோர்

a1(2256)இலங்கையின் சனத்தொகையில் 23 சதவீதம் முதியோர்கள் இருப்பதுடன், இவர்களுக்கான நலன்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகப் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார்.

முதியோர்கள் நலன்சார் செயற்றிட்டங்கள் தொடர்பில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘சமூக சேவைகள் அமைச்சால் முதியோர்களுக்கான பல நலன்சார் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 1,000 ரூபா வழங்குதல், பதிவு செய்யப்பட்ட முதியோர் சங்கங்களுக்கு 5,000 ரூபா வழங்குதல் உள்ளிட்ட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரை பதிவு செய்யப்படாமலிருக்கும் முதியோர் சங்கங்களும் பதிவுகளை மேற்கொண்டு இந்த உதவித்தொகைகளை பெறமுடியும்.

எமது நாட்டின் முதியோர்கள் எமது இன்றைய நிலைக்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு எங்களுக்குண்டு.

அந்த வகையில், வடமாகாணத்திலுள்ள முதியோர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டது. இதன்போது, வடமாகாணத்திலுள்ள 33 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூக சேவைகள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் தங்களது பிரதேச செயலக ரீதியாகவுள்ள முதியவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை ஆராய்ந்து செயற்றிட்டமாக சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கிணங்க, எவ்வாறான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

இச்செயலமர்வில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நளாயினி இன்பராஜ், வடமாகாணத்தைச் சேர்ந்த முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts