Ad Widget

இலங்கைத் தேர்தல் நடைமுறையில் மாற்றம் வருகிறது

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் விருப்ப வாக்கு நடைமுறை காரணமாக, தேர்தல்களில் பல்வேறு சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, கட்சிகளுக்கு உள்ளேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன அதன் காரணமாக தேர்தல் நடைமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனும் பொதுவான கருத்து நிலவியது என அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தொகுதி அடிப்படையில் சில இடங்களும், விகிதாசார அடிப்படை மற்றும் தேசியப் பட்டியலில் சில உறுப்பினர்களும் தேர்தெடுக்கபபட வேண்டும் எனும் கருத்துக்கு ஆதரவு இருந்தது என்றாலும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தர் தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறை மாற்றப்படும்போது தொகுதி மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும், அது அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் அதை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியும் என அக்கூட்டத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டதாக அவர் கூறுகிறார்.

யாழில் எண்ணிக்கை குறையும்

மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகள் நிர்ணயிக்கப்படும்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறையும் என அவர் தெரிவித்தார்.

எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போதும், அரசியல் சாசன விதிகளின் அடிப்படையில் பார்க்கும்போதும் அது தவிர்க்க இயலாது என்றாலும், அது ஆராயப்பட வேண்டியுள்ளது என சம்பந்தர் தெரிவித்தார்.

அதேவேளை நாடாளுமன்றத்திலுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான 225ல் சில மாறுதல் ஏற்படக் கூடும் என்கிறார் அவர்.

அவ்வகையில் ஐந்து அல்லது ஆறு இடங்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும், தேர்தல் நடைமுறை மாற்றங்கள் தொடர்பில் அடுத்த வாரம் மேலும் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts