Ad Widget

இலங்கைக்கென்று தனியான கொவிட் திரிபு உருவாகக் கூடிய வாய்ப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் இலங்கைக்கென்று தனியானதொரு திரிபு உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு உள்ளிட்ட உரிய தரப்பினர் அவதானம் செலுத்தி பரிசோதனைகளை விஸ்தரிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தொற்றின் ஆபத்து குறைவடையாத போதிலும் அதன் கட்டுப்பாடு எமது முகாமைத்துவத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் அனைவரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி முறையாக செயற்படாவிட்டால் ஐந்தாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்து காத்திருக்கிறது. கொவிட் தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதறக்காக பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே 4 பிரதான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதற்கமைய தற்போது மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலின் மூலம் நாட்டில் இன்னொரு கொவிட் அலை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

சுகாதார தரப்பினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு துரிதமாக அந்த வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்க வேண்டும். அதன் பின்னர் தேவைக்கு ஏற்ப நாட்டிலுள்ள ஏனைய பிரிவினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்க முடியும்.

நாட்டில் பல்வேறு கொவிட் திரிபுகள் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. குறிப்பாக வெளிநாடுகளில் இனங்காணப்பட்டுள்ள ஏ.30 மற்றும் டெல்டா பிளஸ் போன்ற திரிபுகளுடைய அபாயம் அறியப்பட்டிருக்கிறது. பல்வேறுபட்ட நாடுகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையிலும் இந்த வைரஸ் திரிபுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா என்பதை அறிவதற்கான பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் இலங்கைக்கென்று தனியானதொரு திரிபு உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு உள்ளிட்ட உரிய தரப்பினர் அவதானம் செலுத்தி பரிசோதனைகளை விஸ்தரிக்க வேண்டும்.

அவ்வாறில்லை எனில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதுடன் மீண்டுமொரு அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகும். நாட்டில் எழுமாற்று பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் கொத்தணிகள் அல்லது உப கொத்தணிகள் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என்றார்.

Related Posts