Ad Widget

ஸ்டீபன் ஜே. ரெப் இன்று வடக்கிற்கு விஜயம்

Stepan Je Rebஇலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் இன்று வடக்குக்கு வரவுள்ளார். இவர் இங்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் சந்திப்பாரென செய்திகள் தெரிவிக்கின்றன.

தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப், யுத்தக் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் எழும் மனித உரிமை பிரச்சினைகள் பற்றி இராஜாங்க செயலாளருக்கு ஆலோசனை வழங்குபவராக உள்ளார்.

பெருந்தொகை மக்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடுஞ்செயல்களை தடுத்தல், எதிர்கொள்ளல், பொறுப்புக் கூறவைத்தல் தொடர்பான அமெரிக்க கொள்கைகளை வகுப்பதற்கு இவரது அலுவலகம் உதவியாக உள்ளது.

இலங்கையிலிருக்கும் போது ரெப், அரசாங்க தரப்பு அலுவலர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் சமூக செயற்பாட்டாளர்களுடனும் பேசுவார் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. இவர் அமைச்சர் ஜி.எல்.பீரிஸை ஜனவரி 10ஆம் திகதி அல்லது 11ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெப் முப்படைத் தளபதிகளையும் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உட்பட சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் சந்திப்பாரென எதிர்பார்க்கப்பட்டுகின்றது.

Related Posts