Ad Widget

இலங்கைக்கு மீண்டும் அமெரிக்கா எச்சரிக்கை!! வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாதம் அடுத்தடுத்து நிகழும் மத மற்றும் கலாசார விழாக்களில் ஆயிரக்கணக்கான படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிறியளவிலான தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. இந்தநிலையிலேயே, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எடுக்கப்பட்டுள்ளன என்றும், குறிப்பிட்ட திட்டங்கள் அல்லது செயற்பாட்டை சுட்டிக்காட்டும் உள்ளீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என, புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிலாபம் தனமல்வில தேவாலயத் திருவிழா, கண்டி எசல பெரஹெரா, நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா மடு மாதாவின் திருவிழா போன்ற விழாக்கள் அடுத்தடுத்து நடைபெறும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் நடைபெறும் பல்வேறு மத திருவிழாக்களிலும், கலாசார விழாக்களிலும் ஆயிரக்கணக்கான படையினர், பாதுகாப்பு பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

7000 சிறப்பு அதிரடிப்படையினர் விழாக்களுக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related Posts