இலங்கைக்குள் 130 – 140 வரையான ஐ.எஸ் தீவிரவாதிகள்!! -ஜனாதிபதி

படைத்தரப்புப் புலனாய்வுத்துறையை, தற்போதைய அரசாங்கம் பலவீனமாக்கியுள்ளது என்றும் அதுவே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமெனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும், இவ்வாறான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கலாமெனச் சந்தேகம் வெளியிட்டார்.

ஊடகப் பிரதானிகளுடனான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி தலைமையில், இன்று (26) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சுக்கான புதிய செயலாளரை, விரைவில் நியமிப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து, பூஜித் ஜயசுந்தர, இன்றைய தினம் பதவி விலகுவார் எனத் தான் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி, அவர்களை நாம் பாதுகாக்க வேண்டுமென்றும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு, ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்பேற்ற வேண்டுமென்றும் கூறினார்.

அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவங்களைக் காரணங்காட்டி, வெளிநாட்டுப் படையினர் இலங்கைக்குள் நுழைய வாய்ப்பளிக்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்த ஜனாதிபதி, ஆனால், தந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு, வெளிநாடுகளின் உதவிகள் பெறப்படுமென்றும் கூறினார்.

நட்பு நாடொன்று, இந்தத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை வழங்கி, தாக்குதல் எவ்வாறு நடக்குமெனக் கூறினாலும், அது தொடர்பான தகவல்கள் வெ ளிவரவில்லை என்றும் பொறுப்பைத் தட்டிக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.எஸ் அமைப்புக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி சூளுரைத்தார்.

புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதால், அவர்களைப் பாதுகாக்க, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் இலங்கையில் சுமார் 130 -140 வரையான ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாமெனச் சந்தேகிப்பதாகவும் அவர்களைக் கைது செய்து, அந்த இயக்கத்தை முற்றாக ஒழிப்பதாகவும் கூறிய ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம், தௌஹீத் ஜமாஅத்தைத் தடைசெய்யக்கூடிய வரையறைகள், இல்லையென்றும் இதற்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுமென்றும் கூறினார்.

Related Posts