இறுதி யுத்தத்தில் ஐநாவின் தலையீடு போதுமானதல்ல: மூன்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில், ஐக்கிய நாடுகளின் தலையீடு போதுமானதாக இருந்திருக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை, இராஜந்தந்திர ரீதியில் இலாவகமாக மூன் தவிர்த்திருந்தார். தவிர, விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை முன்மொழிவதாகவும் கட்டாயப்படுத்தவில்லை என்றவாறான கருத்துக்களையே மூன் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், இலங்கைக்கு, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட மூன், ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அரசியல் கட்சித் தலைவர்கள், வட மாகாண ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரை சந்தித்ததுடன், காலியில் இடம்பெற்ற, நிலைத்திருக்கக்கூடிய சமாதானம்- நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகள் என்ற நிகழ்வில் பங்கேற்றதுடன், வடக்கில் மீள்குடியேற்ற முகாமொன்றுக்கு சென்ற நிலையில், தனது விஜயத்தின் முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்படி கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

தான், 2009ஆம் ஆண்டு மேற்கொண்ட இலங்கைக்கான முதலாவது விஜயத்துக்கும், தற்போதும் பாரிய மாற்றங்கள் இருப்பதாக தெரிவித்த மூன், ஒன்றிணைந்த அரசாங்கம், நல்லாட்சிக்கு புகழாரம் சூட்டியதுடன், முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Related Posts