Ad Widget

இறுதிப் போரில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணை இன்று

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

இந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு மேஜர் ஜென்ரல் சானக்க குணவர்த்தனவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதேவேளை குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாக அறிவித்துள்ள நீதிபதி, அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை நீதிமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அவ்வாறு சமர்பிக்கத் தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் நீதவான் விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை இன்றைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதேவேளை இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதற்கான பெயர் பட்டியல் அடங்கிய ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக மேஜர் ஜென்ரல் சானக்க குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா ஆகியோரே இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.

Related Posts