இறுதிப்போரில் இரசாயன குண்டுகளை பயன்படுத்தவில்லை என்கிறது பாதுகாப்பு அமைச்சு!

இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தினர் இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

எனவே இராணுவம் இறுதிப் போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட வேண்டியது இதனை நிராகரிக்கின்றேன், அதற்கான ஆதாரம் இல்லை.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதை போல அவர்கள் அரசியல் இலாபதிக்காக இந்த உரையை இன்று ஆற்றி இருக்கலாம் என நினைக்கின்றேன்.

குறிப்பாக கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டவேளை முப்படையினர் மனிதாபிமான அடிப்படையிலேயே செயற்பட்டனர் இந்த செயற்ப்பாடு வெளிப்படையாக காணக்கிடைத்தது.

ஆனால் இதனை கூறாமல் விக்னேஸ்வரன் போன்ற இனவாத உறுப்பினர்கள் எமது இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்து வெளிநாடுகளில் பிரச்சினைகளை எழுப்புகின்றனர்.

சர்வதேசத்திற்கு ஏற்றால் போல் நாம் செயற்பட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாட்டில் தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தை நிலைநிறுத்தி மக்களுக்கு சிறந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவே நாம் முயற்சி செய்கின்றோம். அந்த நடவடிக்கைகளை நாம் சிறப்பாக முன்னெடுப்போம்.

கொத்துக்குண்டுகள் போட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணைகள் அவசியமில்லை, உள்நாட்டு விசாரணைகளை நடத்த முடியும், இருப்பினும் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை” என கூறினார்.

Related Posts