Ad Widget

இறுதிப்போரின் போது குழந்தைகளுக்கான பால்மா வழங்கவும் தடை விதிக்கப்பட்டது

இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு, குழந்தைகளுக்கான பால்மாவினைக் கூட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனரென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சையளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள அவர், யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ‘ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவுகளை சுமந்து நினைவுகளுடன் பேசுதல்’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்

போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,

‘2008ஆம் ஆண்டில், கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகப் பணியாற்றியபோது, கிளிநொச்சியை போர் மேகம் சூழ்ந்துகொண்டது. நாள்தோறும் வான்தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

கிளிநொச்சியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது, கிளிநொச்சி மருத்துவமனையும், தர்மபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், விசுவமடு, மாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்து இயங்கியது. ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியும், தேவிபுரத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குலில் உயிரிழந்தார். முள்ளிவாய்க்காலில் நான் பணியாற்றியபோது, குழந்தைகளுக்குக்கூட பால்மா கிடைக்காத அவலம் காணப்பட்டது. கிளிநொச்சியிலிருந்து உதவியமைப்புகள் வெளியேறியபோது போருக்குள் சிக்குண்ட மக்கள், பெரும் அதிர்ச்சியடைந்திருந்தார்கள்’ எனவும் தெரிவித்தார்.

Related Posts