Ad Widget

இறுதிக் கிரியைக்காக வைக்கப்பட்ட சடலத்தை எடுத்துசென்ற பொலிஸார்

இறுதி கிரியைக்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த சின்னையா நல்லையா (72) என்ற வயோதிபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்ததுடன் கோமா நிலைக்குச் சென்றார்.

இந்நிலையில் இவர், வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டு உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து இவருக்கு இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் சடலம் அடக்கம்செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த அச்சுவேலி பொலிஸார் இறந்தவரின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் இறுதிக் கிரியை நிகழ்வுகள் ஸ்தம்பித்ததுடன், கிரியைகள் மேற்கொள்வதற்காக வந்த நபர்கள் தங்கள் தங்களுக்குரிய கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டதுடன் அவரது இறுதிக் கிரியைகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன.

மேற்படி முதியவர் கோமா நிலையில் இருந்தே உயிரரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related Posts