Ad Widget

இறந்தவரை நினைவுகூற உரிமை தேவை

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுதமோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

tamil_civil_society

இறுதி யுத்தத்தின்போது இறந்த தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துதவற்கு முன்னைய அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றிருக்கின்றது.

இதில் கலந்துகொண்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, கடந்த ஐந்து ஆண்டுகளாக இறுதி யுத்தத்தில் இறந்துபோன பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் நினைவுகூரவிடாமல் இலங்கை அரசாங்கமே இதுவரை தடுத்திருந்த செயலானது தமிழ் மக்களுக்கான உரிமை மீறல் என்று தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற பலதரப்பட்ட துயரமான சம்பவங்கள் வெளியில் தெரியவந்துவிடும் என்று இலங்கை அரசாங்கம் அச்சமடைந்திருந்தது என்றே தாம் நினைப்பதாக தெரிவித்த ரூக்கி பெர்னாண்டோ, இறந்தவர்களையும் அவர்கள் இறந்துபோன அந்தச் சந்தர்ப்பங்களையும் மக்கள் நினைவுகூரும்போது உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அங்கு என்ன நடந்தது என்பதுபற்றிய உண்மை வெளியில் தெரியவரலாம் என்று அஞ்சிய அரசாங்கம் அப்படி தெரியக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு தடுத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதேசமயம், விடுதலைப்புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இத்தகைய நினைகூறல்கள் அமைந்துவிடும் என்று அரசாங்கம் எண்ணியிருக்கவும் கூடும் என்றும் ருக்கி பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுவாகவே அரசாங்கமும் சரி, ஜேவிபி, மற்றும் விடுதலைப்புலிகள் போன்றவர்களும் சரி, தாங்கள் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை என்றும் அத்துடன் இவ்வாறான நினைவுகூர்தலின் மூலம் அந்தத் தவறுகள் தொடர்ந்தும் நினைவுபடுத்தப்படுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே தங்கள் தரப்புத்தவறுகள் வெளியில் வருவதைத் தடுப்பதற்கு அவர்கள் எதனையும் செய்வதற்குத் தயாராகவும் இருந்திருக்கின்றார்கள் என்றும், குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களாக முன்னைய அரசாங்கம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும் இது மிகவும் தவறானது என்றும் தெரிவித்தார் ருக்கி பெர்னாண்டோ.

இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவர்களுடைய உற்றார் உறவினர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ, சமூகக்குழுமமாகவோ நினைவுகூரும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது என்றும் அதனைத் தடைசெய்ய முடியாது என்றும் ருக்கி பெர்னாண்டோ கூறினார்.

நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி நிலவுவதாகக் கூறப்பட்டபோதிலும், யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர்வது பற்றியோ அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பற்றியோ புதிய அரசாங்கம் சாதகமாக இன்னும் எதனையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்த ருக்கி பெர்னாண்டோ, இம்மாதம் 18 ஆம் தேதி அதைப்பற்றிய தனது நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Related Posts