Ad Widget

இருநாட்டு ஒப்பந்தம்- இலங்கை மீனவர்கள் வரவேற்பு

இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு அரச தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவை இலங்கையின் வடபகுதி மீனவர்கள் வரவேற்றிருக்கின்றார்கள்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் அல்பட் ஜஸ்டின் சொய்சா, இரு தரப்பு மீனவர் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்துவதை இரு நாட்டு அரசாங்கங்களும் ஊக்குவிக்கும் என்பதை ஆரோக்கியமான ஒரு விடயமாகவே தாங்கள் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதைத் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்பதை வலியுறுத்தியிருந்ததாகவும், அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், 1984 – 1985 மற்றும் 1989 – 1990 ஆகிய வருடங்களில் இரண்டு கட்டமாக வடபகுதியில் இருந்து மக்கள் யுத்தமோதல்கள் காரணமாக பாதுகாப்பு தேடி தமிழகத்தில் தஞ்சம் புகுந்தபோது, அவர்கள் வடபகுதி மீனவர்களுடைய படகுகளிலேயே இராமேஸ்வரம், தனுஸ்கோடி, தங்கச்சிமடம் போன்ற கடலோரப் பகுதிகளுக்குச் சென்றதாகவும், அப்போது அங்கிருந்த சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்ட படகுகள் இன்னும் திருப்பி கையளிக்கப்படவில்லை என்றும், இவற்றுக்குப் பதிலாக கடற்தொழில் உபகரணங்கள் அல்லது வேறு படகுகள் வழங்கப்பட வேண்டும் என்று தாங்கள் தமிழக அரசிடம் கோருவதாகவும் ஜஸ்டின் சொய்சா கூறினார்.

இந்தப் படகுகளை இடம்பெயர்ந்த மீனவர்கள் நாடு திரும்பும்போது திருப்பித் தருவதாக அப்போது தமிழக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், தாங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகையில் மாவட்ட ஆட்சியாளர், தங்களைத் தமது சொந்தப் படகுகளில் அனுப்பி வைப்பது பாதுகாப்பற்றது என தெரிவித்து, பின்னர் அந்தப் படகுகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறு தமது படகுகள் திருப்பி வழங்கப்படாத காரணத்தினாலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related Posts