Ad Widget

இராணுவ புலனாய்வாளர்களே லலித், குகனை கடத்தினர்: சாட்சியம்

judgement_court_pinaiமக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகனை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர் என்று அவ்வியக்கத்தின் மற்றுமொரு உறுப்பினர் ஜனபிரிய குமாரகே நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

அரசாங்கத்தின் தேவைகளுக்கு அமையவே பொலிஸ் இராணுவ புலனாய்வாளர்கள் அவர்களை கடத்தியுள்ளனர் என்றும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

லலித், குகன் காணாமல் போன வழக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவ்வியக்கத்தின் மற்றுமொரு உறுப்பினரான ஜனப்பிரிய மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

யாழ். நகரப்பகுதியில் வைத்து 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி இவ்விருவரும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கூறப்படுகின்றது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் ஜனபிரிய மன்றில் சாட்சியமளிக்கையில்,

கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழப்பாணம் போன்ற இடங்களில் காணாமல் போனோர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்கள் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.

பட்டதாரிகள் சங்கத்தின் தலைவராக லலித் இருந்ததுடன், வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்களை திரட்டியதுடன் நலன்புரி முகாமிலும் வேலை செய்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய், ஜனநாயகத்தினை பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்களை யாழ்ப்பாணத்தில் 2011 டிசெம்பர் மாதம் ஒட்டிக் கொண்டிருந்தபோது, லலித் மற்றும் குகனை யாழ். பொலிஸார் கைதுசெய்தனர்.அவர்கள் கைதுசெய்யப்பட்ட வேளை, நானும் அவர்களுடனேயே இருந்தேன்.

அதேவேளை, கைதுசெய்யப்பட்டவுடன் எங்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவில்லை. மறுநாள் நீதமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டோம். விளக்க மறியலில் வைக்கப்பட்ட போது, கட்சியின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் பெரியவரின் உத்தரவின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சில நாட்களின் பின்பு விடுதலை செய்வோம் என்றும் பொலிஸார் கூறினர்.

அத்துடன், 5 தடவைகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டோம். அதன் பின்னர் வழக்கு பொலிஸாரினால் வாபஸ் பெறப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, கிளிநொச்சி பகுதியில் அரசியல் வேலை செய்து கொண்டிருக்கும்போது, வாகனத்தில் வந்த 15 பேர் கொண்ட குழுவினர் லலித் மற்றும் குகன் உட்பட பலரை இரண்டாவது தடவையாக கைதுசெய்தனர். நான் அப்போது மேலே இருந்தேன். என்னை கைதுசெய்யவில்லை. பின்னர் இருவரையும் விடுதலை செய்தனர்.

இதேபோன்று மூன்றாவது தடவையாக மன்னாரிலும் கைதுசெய்யப்பட்டோம் என்றும் சாட்சியமளித்தார்.
அதேவேளை, மன்னாரில் குற்றப்புலனாய்வு பிரிவினர் எங்களிடம் விசாரணைளை மேற்கொண்டனர். அரசியல்

நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், இனிமேலும் இந்தப்பகுதிக்கு வரவேண்டாம் என்றும் அச்சுறுத்தல் விடுத்தனர்.
அத்துடன், எமது வீட்டிற்கும் போய், அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று எங்களுக்கு சொல்லுமாறு உறவினர்களிடமும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன், அவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

வீட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் வந்ததாகவும் அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளதாகவும் லலித்தின் அப்பா ஆறுமுகம் வீரராஜூம் எங்களிடம் கூறியிருக்கின்றார்.

மற்றுமொருநாள், யாழ். உடுவில் பகுதியில் உள்ள அலுவலகத்தில் சுவரொட்டி வேலைகளை செய்துகொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிள் இரண்டு பேர் அலுவலகத்திற்குள் வந்தனர். ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் வெளியில் நின்றார்.

அலுவலகத்திற்குள் வந்தவர் லலித் என்ன? செய்கிறார் எங்கு போய்விட்டார் என்று கூறுமாறும் கேட்டதுடன் அரசியலில் பல அழுத்தங்கள் இருப்பதாக கூறிச் சென்றனர்.

மற்றுமொருநாள், இராணுவ புலனாய்வு பிரிவினர் வந்தார்கள். விபரங்களை கேட்டு எழுதினார்கள். லலித் எங்கே? அலுவலகம் வருவாரா என்றும் கேட்டார்கள், வேலை நிறுத்தி விட்டு அவரை கொழும்புக்கு போகுமாறு சொல்லச் சொன்னார்கள். அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ச்சியாக பொலிஸாரும், இராணுவ புலனாய்வாளர்களும் விசாரணைகளை மேற்கொண்டார்கள்’ என்றார்.

கடைசியாக 2011 டிசெம்பர் 10 ஆம் திகதி லலித் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேச முற்பட்ட போது, தொலைபேசியில் கரகரப்பு சத்தம் கேட்டது. அப்போது அவர் சொன்ன விடயம் எனக்கு தெளிவாக கேட்கவில்லை என்றும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

லலித் மற்றும் குகனின் கடத்தல் மற்றும் காணாமல் போனதற்கு அரசாங்கம் மற்றும் பொலிஸ் சி.ஜ.டி உட்பட இராணுவ புலனாய்வாளர்கள்தான் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் அவர் சாட்சியமளித்தார்.

அதன் பின்பு அரச சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணை இடம்பெற்றதுடன் வழக்கினை நீதவான் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related Posts