Ad Widget

இராணுவ தளபதி மற்றும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த நஷ்டஈடு வழக்குகள் ஒத்திவைப்பு

judgement_court_pinaiஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவினால் நஷ்டஈடு கோரி உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கு நேற்றய தினம் யாழ். மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இராணுவ தளபதி சார்பாக நீதிச்சேவை ஆணைக்குழு சட்டத்தரணி கலிங்க இந்திரானா அடங்கிய சட்டத்தரணிகள் குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

தனது பதவிக்கு அவமானம் ஏற்படும் வகையில், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளில் செய்தி பிரசுரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினரதும் வாதப் பிரதிவாதங்களை கருத்திற்கொண்ட யாழ். மாவட்ட நீதிபதி அ.ஆனந்தராஜா மேற்படி வழக்கினை ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இராணுவத் தளபதி சார்பாக சட்டத்தரணிகளான சம்பத் விதர ரஞ்சித் ராஜபத்திரன, எஸ்.ஜயசிங்க நிரஞ்சன் ஸ்ரீவர்த்தன, உபேந்திரா குணசேகர ஆகியோரும், உதயன் பத்திரிகை சார்பாக முன்னாள் நீதிபதியும் சட்டத்தரணியுமான இ.த.விக்னராஜாவும் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை

1000 கோடி நஷ்டஈடு கோரி உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தனக்கும் தனது கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக 1000 கோடி வழங்க வேண்டும் எனக்கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் எதிராளிகளினால் நீதிமன்றில் வழக்கு வினாக்கள் தாக்கல் செய்யப்பட்டதனால், யாழ். மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் க.சிவகுமார் வழக்கினை மே 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வழக்கு தொடுநர் சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் ஆலோசகரும், சட்டத்தரணியுமான தேவராஜ் மற்றும் சட்டத்தரணி அப்துல் நஷீம் மற்றும் சட்டத்தரணி செலஸ்ரின் சனிஸ்லஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Related Posts