வடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருவதன் காரணமாகவே அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தாக முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை கூறியுள்ளார்.
போர் நினைவு சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளேன். அந்த நினைவு சின்னங்கள் இராணுவத்தின் மேலாதிக்கத்தை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது என்பதனால் அவற்றை அகற்ற கோரினேன்.
இது நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்கும் இடையூறாக இருக்கும் அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என கோரி உள்ளேன். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரியவில்லை.
நினைவு சின்னங்களை பார்க்கும் போது பல மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது. அந்த காலத்தில், தமக்கு நடந்த அநியாயங்கள் அவர்களுக்கு நினைவு வருகின்றது.
அது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எடுத்து கூறி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.