முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் இராணுவத்தினர் பயணித்த அம்புலன்ஸ் வண்டி, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவ முகாமின் இராணுவ அம்புலன்ஸ்வண்டி மோதியது.
இன்று புதன்கிழமை காலை (28) இடம்பெற்ற இச்சம்பவத்தில் வற்றாப்பளையைச் சேர்ந்த சூரிப்பிள்ளை கந்தப்பிள்ளை (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து விபத்தினை ஏற்படுத்திய இராணுவ அம்புலன்ஸ் வண்டியை உடனடியாக இராணுவத்தினரால் அகற்றப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர்.
ஆயினும், தகவல் அறிந்தது உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மக்களுடன் கலந்துரையாடி விபத்து தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம் பெறும் என வழங்கிய வாக்குறுதியை அடுத்து குழப்ப நிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் பின்னர், முள்ளியவளை பொலிஸார், சடலத்தை அங்கிருந்து மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்