இராணுவம் பொலிஸாருக்கு எதிராக செயற்பட்டு வடக்கில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி!

வடக்கில் பெருமளவு படையினர் நிலைக்கொண்டு இருக்கும்வரை அங்கு ஜனநாயக சூழல் ஏற்பட வாய்ப்பில்லாததுடன், மக்கள் நிம்மதியாகவும் வாழ முடியாது. எனவே வடக்கில் ஜனநாயக சூழலை ஏற்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தலைத்தூக்கியுள்ள சமூக விரோத குழுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர், ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் செயற்படுவதாக நாம் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், அதன்போது அதனை மட்டெடுக்காதவர்கள் தற்போது அக்குழுவுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் இராணுவ தளபதி ஒருவரே ஆவா குழுவை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் ராஜித பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இராணுவம் தொடர்புபட்டுள்ள இந்த சமூக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் எவ்வாறு விசாரிக்க போகின்றது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அதேவேளை, இராணுவமானது பொலிஸாருக்கு எதிராக செயற்பட்டு வடக்கில் மீண்டுமொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றதா என்ற சந்தேகமும் மேலெழுந்துள்ளது. இதனால் வடக்கில் மீண்டும் நிம்மதியற்ற வாழ்க்கைமுறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களின் நிம்மதியான வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் இவ்வாறான சமூக விரோத குழுக்களுக்கு எதிராக விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts