Ad Widget

இராணுவம் எனில் இலவசம் மக்களுக்கு மட்டும் கட்டணம், வீடமைப்பு அதிகார சபையின் நடவடிக்கை குறித்து விசனம்

14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது.

வரணி இடைக்குறிச்சியில் 10 வீட்டுத்திட்டத்துக்குரிய, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் பொது மக்கள் வாழ்ந்து வந்தனர். 2000ஆம் ஆண்டு இடம் பெற்ற போர் நடவடிக்கையின் போது மேற்படி 10 வீட்டுத்திட்டத்துக்குரிய காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்தனர்.

அதன்பின்னர் அந்தக் காணியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே குறித்த காணியை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது அந்தக் காணியின் உரிமையாளர்கள் மேற்படி காணியில் குடியமர்வதற் குரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு இந்திய வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த காணிக்குரியவர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையிடம் ஆரம்பத்தில் குறித்த காணியை வீட்டுத்திட்ட கடனுக்கு பெற்றிருந்தனர் என்றும், அதற்குரிய முழுமையான கடனை அவர்கள் கட்டவில்லை என்றும் அதனால் மீதிப் பணத்தைப் பெற்றுத் தருமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபை பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளது.

இராணுவத்தினர் இருந்தபோது காணி தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத தேசிய வீடமைப்பு அதிகாரசபை தற்போது மக்கள் மீளக்குடியமரவுள்ள நிலையில் மீதிப் பணத்தை கோரி வருகின்றனர் என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த மக்கள் இடம்பெயர்வால் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்களால் குறித்த தொகைப் பணத்தைச் செலுத்த முடியாத நிலையில் வீட்டுத் திட்டத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts