Ad Widget

இராணுவமும் ஈ.பி.டி.பியுமே எனது மகனை கடத்தியது! கண்ணீர் மல்க தாயார் சாட்சியம்

‘இராணுவத்தினருடன் வந்த ஈ.பி.டி.பியினர் கடத்திச் சென்ற எனது மகனை கடற்படையின் சீருடையுடன் எனது உறவினர்கள் பலரும் கண்டுள்ளனர்.’ இவ்வாறு காணாமல் போன நபரான நீர்வேலி வடக்கைச் சேர்ந்த அச்சுதன் வைகுந்தன் என்பவரின் தாயார் அருந்ததி காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார்.

MWpa 77eeer

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் கட்ட விசாரணைகள் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

நீர்வேலி வடக்கிலுள்ள எனது வீட்டை கடந்த 2006 ஆம் ஆண்டு பெருமளவு இராணுவத்தினர் சுற்றி வளைக்க உள்ளே வந்த 9 ஈ.பி.டி.பியினர் எனது மகனான வைகுந்தனை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துச் சென்றனர்.

வீதிக்கு இழுத்துச் சென்ற எனது மகனை அச்செழு இராணுவ முகாமுக்குள் கொண்டு சென்று மறைத்தனர். நாங்கள் அங்கு சென்று மகன் குறித்து விசாரித்த போது அப்படி யாரும் அங்கு இல்லை என்றும் தாம் யாரையும் பிடிக்கவில்லை என்றும் கூறி விட்டனர்.

நான் முகாமுக்குள் செல்ல முயன்ற போது உள்ளே நுழைய வேண்டாம் என்று துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் மிரட்டிக் கலைத்தனர். ஆங்கிருந்து வந்த பின்னர் பல இடங்களுக்கும் சென்று எனது மகன் குறித்து முறைப்பாடு செய்தேன்.

இப்படியிருக்கையில் நயினாதீவில் உள்ள கடற்படை முகாம் ஒன்றில் கடற்படை சீருடையுடன் எனது மகனை எனது உறவினர்கள் கண்டனர். அத்துடன் அவர் அதே சீருடையுடன் அங்குள்ள ஈ.பி.டி.பி. முகாமுக்கு குடிதண்ணீர் ஏற்றிச் செல்வதையும் எனது உறவினர்கள் பலர் கண்டுள்ளனர்.

யுத்தம் முடிந்த பின்னர் கடற்படை சீருடையுடன் எனது மகனை வவுனியா ஜோசப் முகாமில் எனது மகனை உறவினர்கள் கண்டனர். எனது மகனை பல இடங்களில் பலரும் கண்டதால் எனது மகன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே எனது மகனை மீட்டுத் தாருங்கள் என மன்றாட்டமாக வேண்டுகிறேன் என கண்ணீர் மல்கக் கூறினார்.

Related Posts