இராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: முதலமைச்சர்

தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க முதலமைச்சர் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க குற்றம் சாட்டியிருந்த நிலையில் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இராணுவத் தளபதி கூறியது உண்மை என்ற போதிலும் எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருப்பை பலப்படுத்த எத்தனிக்கும். இதனால் எமது தமிழினமே பாதிப்படையும்.

இராணுவத்தின் வேலை வட மாகாணத்தில் முடிவடைந்துள்ளதால், அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது. இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைத்திருப்பதை எம்மை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாம் நோக்குகின்றோம்” எனத் தெரிவித்தார்.

Related Posts