Ad Widget

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விவரத்தை 28ஆம் திகதி சமர்ப்பிக்கவேண்டும்! ஜனாதிபதி உத்தரவு

வடக்கு , கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகள் தொடர்பான விவரங்களின் தொகுப்பை அதிகாரிகள் சமர்ப்பிக்கத் தவறியதால், அவர்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிருப்தியை நேரில் வெளிப்படுத்தியதுடன் காரசாரமாகப் பேசியுமுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் அத்தனை விவரங்களையும் முழுமைப்படுத்தி, அன்றைய தினம் இடம்பெறும் கூட்டத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார்.

“நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை 6 மாத காலத்தினுள் மீளக்குடியமர்த்துவேன் என்று வாக்குறுதி வழங்கிவிட்டேன். அதனை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் அதிக சிரத்தை எடுத்துச் செயற்பட வேண்டும்” என்றும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் 8 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியமர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட செயலணியின் மூன்றாவது கூட்டத் தொடரான நேற்றைய தினம், ஜனாதிபதி கடந்த இரண்டு கூட்டங்களில் சொல்லப்பட்ட விடயங்களை மீளாய்வு செய்தார்.

ஒவ்வொரு மாவட்ட அரச அதிபர்களும் தமது மாவட்டப் புள்ளி விவரங்களைச் சமர்ப்பித்தனர். பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் எவ்வளவு, அதில் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு தேவைக்கு வைத்திருக்கும் காணிகள் எவ்வளவு? அதன் காரணமாக எவ்வளவு மக்கள் இடம்பெயர்ந்து எங்கிருக்கின்றனர்? நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களின் காணிகள் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன? உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எவ்வளவு? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்தனர்.

இதன் பின்னர் மாகாண ரீதியாக தொகுப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

இந்த விவரங்கள் தயாராக இருக்கவில்லை. இதனால் ஜனாதிபதி அதிகாரிகளிடத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த கூட்டங்களின்போது, இந்த விவரங்களைத் தயார்படுத்துமாறு கூறியதை அதிகாரிகள் செயற்படுத்தவில்லை என்று ஜனாதிபதி அதிகாரிகளைக் கடிந்துகொண்டுள்ளார்.

“மக்களை 6 மாத காலத்தினுள் மீளக்குடியமர்த்துவதாக வாக்குறுதி வழங்கி விட்டேன். அதனைச் செயற்படுத்த அதிகாரிகள் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். காணிகள் தொடர்பான முழு விவரங்களையும் நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, அதனை பொதுவான ஒழுங்கில் திரட்டுவதற்காக விண்ணப்பப்படிவம் செவ்வாய்க்கிழமை (நேற்று) அனுப்பி வைக்கப்படும். அதனை சகல மாவட்டச் செயலர்களும் பூரணப்படுத்தி உடனடியாக அனுப்ப வேண்டும். எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறும் அடுத்த கூட்டத்துக்கு சகல விடயங்களும் தயாராக இருக்க வேண்டும்” என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த கூட்டங்களின்போது, வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தேன். அந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை” என்று ஜனாதிபதி சாடியுள்ளார்.

அடுத்த கூட்டத்தில் அந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் பணித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில் பங்கேற்கவில்லை. உடல் நலக் குறைவினால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் யாழ்.குடாநாட்டில் மட்டும், வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக, 118 இடங்களில் படையினருக்குக் காணி வேண்டும் என முப்படையினராலும் கோரப்பட்டுள்ளது என்று நில அளவைத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேற்குறித்த காணிகளைப் படையினருக்குக் கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்துக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களிலிருந்து அவர் இனிமேலும் காணி அபகரிப்பை விரும்பவில்லை என்பதும், படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்து மீள்குடியேற்றத்தையே அவர் விரும்புகின்றார் என்பதும் தெரியவந்துள்ளது என்று மேற்படி கலந்துரையாடலில் பங்கேற்ற அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts