Ad Widget

இராணுவத்தினர் காணி சுவீகரிப்பு: நீதிமன்றம் விசாரணை

யாழ்ப்பாணத்தில் மூன்று தனியார் காணிகளை கையகப்படுத்த இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

காணி உரிமையாளர்கள் மூவர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீ பவன் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவம் காணி சட்ட விதிமுறைகளுக்கு மாறாக தங்களது காணிகளை கையகப்படுத்தியதாக தெரிவித்துள்ள மனுதாரர்கள், தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதாக அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்த போதிலும் அதனை உறுதிப் படுத்தக் கூடிய தகுந்த ஆவணங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

இதனால் இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது அவசியமென்று கூறிய தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெறுமென்று அறிவித்தார்.

அன்றைய தினம் குறித்த முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்குமாறு மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவ தளபதி உட்பட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Posts