Ad Widget

இராணுவத்தினரையும் பிடித்து அடையுங்கள் – வடமாகாண முதலமைச்சர் சி.வி

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். குற்றம் செய்த இராணுவத்தினர், எங்கே சிறையில் இருக்கின்றனர்? முதலில் அவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள்.5 அல்லது 6 வருடங்கள் கழித்து அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கிஸாப், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கு தூதுவர் கெதி ரூஸ்வெல் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

அவ்விருவருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் முதலமைச்சர் அலுவலகத்தில், சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பு முடிவடைந்த பின்னர், அரசியல் ரீதியிலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதா என முதலமைச்சரிடம் கேட்டபோது, அரசியல் விடயங்கள் கதைக்கப்படவில்லையெனக்கூறிய முதலமைச்சர், அரசியல் கைதிகள் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டார்.

‘அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என நாங்கள் கேட்கின்ற போது, இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் எனக்கோருகின்றனர். இது சிரிப்புக்குரிய விடயமாகும். குற்றம் செய்தவர்களை சிறையில் அடையுங்கள் அதன் பின்னர் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஆராயலாம். இப்படிக்கூறுவது கேலிக்குரிய விடயமாகும். இது அலாப்பல் விளையாட்டு ஆகும்.

பொது மன்னிப்பு என்பது அரசியல் ரீதியிலான தீர்மானம். ஜே.வி.பி காலத்தில் கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல காரணங்களை மனதில் வைத்து அரசியல் ரீதியில் செயற்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.

சிறையில் இருக்கும் கைதிகள் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள். அவர்களுடன் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்படாமல் இருப்பவர்களை சம்பந்தப்படுத்தி, பேசுவது நகைப்புக்குரியதாகவுள்ளது’ என்று முதலமைச்சர் மேலும் கூறினார்.

Related Posts