Ad Widget

இராஜதந்திர முயற்சியில் சம்பந்தன் தோல்வியடைந்தாரா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச சமுகத்திலிருந்து மறைக்கப்பட்டு விடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டாரா அல்லது அவரது இராஜதந்திர முயற்சியில் தோல்விகண்டாரா என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு நடைபெறவுள்ளது.

மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஸ்ரீலங்கா தொடர்பான விடயம் ஐ.நா பேரவையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஜெனிவாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒன்றைரை ஆண்டு கால அவகாசம் வழங்குமாறும் கோரவுள்ளது.

இந்நிலையிலேயே கால அவகாசம் வழங்க கோரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யோசனைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இலங்கை தமிழரசு கட்சி மறைமுக ஆதரவு வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் தமக்குள் விவாதித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்தவொரு விவாதத்தையும் நடத்தவில்லையெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related Posts