Ad Widget

இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு?

வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம் என விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும் புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன். என அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் மக்களை பிரித்து எமது இனத்தை அழிப்பதற்கும், எமது ஒற்றுமையைச் சீர் குலைக்கவும் பல சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவமோகன் நேற்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி இவ்வாறு தமிழ் மக்களை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டால் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவை போல வடக்கை காட்டி கொடுத்தவர் விக்னேஸ்வரனாக இருப்பார் எனவும் கூறியிருந்தார்.

இவ்வாறு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர், விக்னேஸ்வரன் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் இருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

எது எப்படியாயினும் விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கும் மக்களின் செல்வாக்கு குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர், அக்கட்சியை பாதிக்கின்ற வகையில் செயற்பட மாட்டேன் என கடந்த காலங்களில் தெரிவித்துவந்தாலும் கூட இரு தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றால் இந்த முடிவு மாற்றமடையக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts