Ad Widget

இரண்டு வாரங்களில் தீவகக் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு- கஜதீபன்

p-kajatheepanதீவகத்தின் குடிநீர்ப்பிரச்சனைக்கு வடமாகாண சபையினால் இருவார காலத்தில் தீர்வுகாண முயற்சி எடுக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்து குடிநீர்ப்பிரச்சனை தொடர்பில் மக்களுடன் சந்திப்பினை மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘தீவகத்தின் குடிநீர்ப்பிரச்சனையில் வடமாகாணசபை மிகுந்த கரிசனை கொண்டுள்ளது. இன்னும் இரண்டு வாரகாலத்துக்குள் வடமாகாண சபையில் நீர் விடயங்களுக்கு பொறுப்பாகவுள்ள விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அமைச்சினூடாக தீவகப்பகுதிக்கென இரண்டு தண்ணீர் பவுஸர்களில் குடிநீர் வழங்கப்படும். இதன்மூலம் ஓரளவு குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்க்கமுடியும்.

தீவகத்தின் குடிநீர்ப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டுமானால் இங்குள்ள நன்னீர்க்குளங்களைப் புனரமைத்து பாரிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதன் மூலம் நன்னீர் ஊற்றுக்களை உருவாக்க முடியும். இச்செயற்றிட்டம் தொடர்பில் எதிர்காலத்தில் வடமாகாணசபை ஊடாக முயற்சி எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்தார்.

இதன்போது பிரதேசத்தில் வரட்சியால் வரண்டுபோன குளங்களையும், கிணறுகளையும் பார்வையிட்டார்.

இச்சந்திப்பில் சனசமூக நிலையம், விளையாட்டுக்கழகம், மாதர் அபிவிருத்திச்சங்கம், முன்பள்ளி, ஆலயங்கள், கடற்றொழில் கிராமிய அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts