Ad Widget

இரண்டு மாதங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

nic-IC

எட்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்துக்கு, வரும், செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையில், அனைத்து கைவிரல் அடையாளங்களையும் உள்ளடக்கிய உயிரியல் தகவல்கள் மற்றும் ஒளிப்படம் அடங்கிய இலத்திரனியல் அட்டை ஒன்று இருக்கும்.

65 வயது வரை, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது புதுப்பிக்கப்படும். 65 வயதுக்குப் பின்னர் புதுப்பிக்கத் தேவையில்லை.

இந்த அடையாள அட்டையில் ஏதேனும் மோசடிகள் செய்தால், அளிக்கப்படும் தண்டனையும் மூன்று மாதச் சிறைத்தண்டனையில் இருந்து ஒரு ஆண்டு சிறைத்தண்டனையாக அதிகரிக்கப்படும். அத்துடன் அபராதமும் 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

இந்த அடையாள அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரங்களும் பதிவு செய்யப்படும். எனினும் அது கட்டாயமானதல்ல. இந்த தரவுகள், குடிவரவுத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.

இந்த அடையாள அட்டையில் உள்ள தரவுகள், அடையாள அட்டையின் உரிமையாளர் அல்லது நீதிமன்ற உத்தரவின் மூலம் கோரப்பட்டால் மட்டுமே வெளியிடப்படும்.

புதிய அடையாள அட்டைக்கு கிராம அதிகாரிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதேச செயலக அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts