Ad Widget

இரண்டு பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேகநபரை தனது வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணி!!!

கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணியால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை உள்ளதால் அவரைக் கைது செய்ய முற்பட்டதால் பெண் சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் பருத்தித்துறை நீதிமன்ற மன்ற வளாகத்துக்கும் வெளியேயும் இந்தப் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இரண்டு பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேகநபரை பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று முற்பகல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு தனது வாகனத்தில் ( பெண் சட்டத்தரணி பயணித்த வாகனம்) பெண் சட்டத்தரணி அழைத்துச் சென்றார்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் சந்தேகநபருக்கு எதிராக வழங்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதற்காக அவரைச் சரணடைய வைப்பதற்கே பெண் சட்டத்தரணி தனது வாகனத்தில் அழைத்துச் சென்றார் என்று தெரிவிக்கப்பட்டது.பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தத் தகவலை அறிந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உள்பட பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே குவிந்தனர். பெண் சட்டத்தரணி அழைத்துவந்த சந்தேகநபரை அவர்கள் கைது செய்வதற்கு முற்பட்டனர். அதனால் பொலிஸாருக்கும் பெண் சட்டத்தரணிக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

அதனால் நீதிவானிடம் சென்று பொலிஸார் தன்னுடன் நடந்துகொண்ட விதம் தொடர்பில் முறையிடப் போவதாகக் கூறிவிட்டு பெண் சட்டத்தரணி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றப் பதிவாளரிடம் சென்றார். அங்கு தன்னால் அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் தொடர்பான வழக்கேட்டை உடனடியாக நீதிவானுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அங்கிருந்து நீதிவானின் உதவியாளர்களிடம் சென்று தான் நீதிவானை சந்திப்பதற்கு உடனடியாக அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார். “நீதிவான் என்னை உடனே சந்திக்க முடியுமா? முடியாதா என அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்று பெண் சட்டத்தரணி நீதிமன்ற ஊழியர்களிடம் பதற்றத்துடன் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் பிற்பகல் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் பெண் சட்டத்தரணியை நீதிவான் சந்தித்தார்.

சந்தேகநபரை நீதிமன்றில் சரணடைய வைக்கும் பெண் சட்டத்தரணியின் முயற்சி பயனளிக்காமல் நீதிமன்ற வளாகத்திலிருந்து அவர் சென்றார். எனினும் சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாரா? அல்லது மீள அழைத்துச் செல்லப்பட்டாரா? என்பது தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிடவில்லை.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 154ஆம் பிரிவின் கீழ் குற்றவாளி ஒருவரையோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரையோ தனது வீட்டிலோ அல்லது வாகனம் உள்ளிட்ட உடமைகளிலோ மறைத்தோ அல்லது காப்பாற்றும் வகையிலோ வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் குற்றச்சாட்டு சட்டத்தரணி ஒருவர் மீதும் சுமத்தப்படலாம். அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டு தண்டனைகளையும் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts