Ad Widget

இரணைமடு குள விவகாரம்: வட மாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் கண்டனம்

eranamadu-kulamகிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தில் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பாதகமான பல விடயங்கள் குறித்து வடமாகாண சபை கவனத்தில் கொள்ளவில்லை என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளத் தலைவர் செ.சிவப்பிரகாசம் புதனன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

´இந்தத் திட்டம் பற்றி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு என்ன சொல்லப்போகின்றோம், இந்தத் திட்டத்தில் நாங்கள் உங்களுக்கு உறுதியாக இருப்போம். இதனை நாங்கள் ஏற்கவில்லை. இதனை உடனடியாக நிறுத்துவோம் என்று மாகாண சபையில் இருந்து எங்களுக்கு இன்று வரையில் எந்த பதிலும் வரவில்லை. மாறாக, இரணைமடு குளத்தில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள்.

ஆகவே, எங்களுக்கு மாகாண சபையோ அரசியல்வாதிகளோ எவரும் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களை நாங்கள் நம்பவில்லை. நம்பக் கூடிய வகையில் அவர்கள் நடந்துகொள்ளவில்லை. இறுதியாக, உறுதியாக, தெட்டத்தெளிவாக நாங்கள் எங்களுடைய தீர்மானத்தை முன்னெடுப்போம்.

இந்தத் திட்டத்தை எங்களால் நிறுத்த முடியும். அதை நாங்கள் செய்து காட்டுவோம். இதுதான் எங்களுடைய கருத்து, முடிவு என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் செ.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட பெரிய பரந்தன் விவசாய அமைப்பின் தலைவர் யோகநாதன், இரணைமடு குளத்தின் தண்ணீரானது கிளிநொச்சி மாவட்டத்து மக்களுக்கே காணாமல் இருக்கும்போது இங்கிருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிப்பது பொருத்தமற்ற செயலாகவே நாங்கள் கருதுகின்றோம் என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகளுக்கு இந்தக் குளத்தில் இருந்து நீர் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே இந்தக் குளத்தை அபிவிருத்தி செய்து அதிக நீரைப் பெற்று அதனை இந்த காணிகளுக்கு வழங்க வேண்டும். எங்களுடைய விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் காணாமல் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இங்கிருந்து தண்ணீர் கொண்டு செல்வதை நாங்கள் விரும்பவில்லை என்றும் யோகநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இராமநாதபுரம் விவசாய அமைப்புத் தலைவர் சிவமோகன், 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு இப்போது நீர் வழங்கப்படுகின்றது. இன்னும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலத்திற்கு இந்தக் குளத்தில் இருந்து நீர் வழங்கப்பட வேண்டிய தேவை இருந்தும் நீர் வழங்கப்படாமல் இருக்கின்றது இந்த நிலையில் இங்கிருந்து தண்ணீரை எவ்வாறு வெளியில் கொண்டு செல்ல முடியும் என்று வினா எழுப்பினார்.

இரணைமடு குளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இதனை அபிவிருத்தி செய்யுங்கள். அதில் அதிக நீரைச் சேமிப்பதற்கும் அதன் மூலம் எங்களுடைய விவசாய நிலங்கள் பயனடைய வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம். இந்த அபிவிருத்திக்கென வருகின்ற பணத்தை வேண்டாம் திரும்பிப் போகட்டும் என்று நங்கள் ஒருபோதும் கூறவில்லை என்றும் சிவமோகன் கூறினார்.

இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்கின்ற 21 விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related Posts