Ad Widget

இரணைமடு குளத்தில் மீன்பிடிப்பதை தடுக்கவில்லை : இராணுவம்

இரணைமடு குளத்தில் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாகவும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளில் எதுவித உண்மைகளும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

ruwan-vanika-sooreyaa

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார்.

இரணைமடு வாவி பிரதேசத்தில் மீன்பிடி சங்கம் ஒன்று உள்ளது. அதில் அப்பிரதேசத்தில் வசிக்கும் 120ற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் அங்கம் வகிக்கின்றன. இவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் அனைத்தும் இந்த மீனவ சங்கத்தின் ஊடாகவே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த மீனவ சங்கத்தினரின் செயற்பாடுகள், தீர்மானங்களில் இராணுவத்தினர் ஒருபோதும் தலையிடுவதில்லை.

இரணைமடு வாவியில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளில் அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் மாத்திரமே மேற்கொள்ளமுடியும். அவ்வாறு அங்கத்துவம் பெறாதவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படுவதில்லை. விசேடமாக, வெளி பிரதேசங்களில் இருந்து வருபவர்களுக்கு அங்கு மீன்டிபிடியில் ஈடுபட அனுமதியளிக்கப்படுவதில்லை.

இது சாதாரணமாக சகல இடங்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு நடைமுறையாகும். உதாரணமாக அநூராதபுரம் பிரதேசத்தில் கூட அங்குள்ள மீனவ சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு மாத்திரமே மீன்பிடியில் ஈடுபட அனுமதியளிக்கப்படுகின்றது.

அந்த பிரதேசத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களை பாதுகாப்பதற்கும் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தவுமே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் இந்த விடயம் தொடர்பில் தவறான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இராணுவத்தினரின் மீது பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.

எது எவ்வாறாயினும் இரணைமடு வாவியில் மீனவர்களின செயற்பாடுகளுக்கு இராணுவத்தினரால் எந்தவிதமான இடையூறுகளும் மேற்கொள்ளப்படவில்லை என ருவன் வணிகசூரிய மேலும் கூறினார்.

Related Posts