Ad Widget

இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘வட.மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடுக்குளம். கடந்த 1975 ம் ஆண்டுக்கு பின் எவ்வித பாரிய புனரமைப்பு வேலைகளும் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையால் மேற்கொள்ளப்பட முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையும் இடைநிறுத்தப்பட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினது இலகுகடன் திட்டத்தின் கீழ் குளத்தின் அணைக்கட்டுப்பகுதியை இரண்டு அடியால் உயர்த்த திட்டமிடப்பட்டது.

இதன்படி 19 MCM நீர் கொள்ளளவை கூட்டுவதற்கான திட்ட வரைபும் அதனுடன் இணைந்த ஏனைய கட்டுமானங்களும் வான், பாலம் அமைப்பு வேலைகளும் திருவையாறு ஏற்று நீர்ப்பாசன வேலைகளும் முன்மொழியப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் சுமார் 2000 மில்லியன் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு சமாந்தரமாக குளத்தின் கீழ் அமைந்திருக்கும் 21, 000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கின்ற பிரதான வாய்க்கால், D வாய்க்கால், வயல் வாய்க்கால், கழிவு வாய்க்கால் மற்றும் விவசாய வீதிகள் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் IFAD நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2890 மில்லியன் இலகு கடனிலும் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 310 மில்லியன் நிதி உதவியுடனும் இத்திட்டம் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2017 ம் மாசி மாதமளவில் ஒதுக்கப்பட்ட நிதியில் வேலைத்திட்டங்களை நிறைவு செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts