Ad Widget

இரணைமடுக்குள அணைக்கட்டுப் புனரமைப்பு

கிளிநொச்சி இரணைமடுக்குள அணைக்கட்டுப் புனரமைப்புப் பணிகளை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (24.08.2015) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

13

யாழ்ப்பாணத்துக்கு இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு இணங்கினால் மாத்திரமே இரணைமடுக்குள அணைக்கட்டுத் திருத்த வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்ற நிபந்தனை முன்னர் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இரணைமடுக்குளத்திலிருந்து நீரை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வருவதற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத்துக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்துமென்று தொடர்ச்சியாக அவர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர்.இது தொடர்பாக ஆராய வடக்கு மாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவும்,இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர் எடுத்து வரப்படின் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயம் பாதிப்புக்கு ஆளாகும் என்று சுட்டிக்காட்டியிருந்ததோடு, யாழ் குடாநாட்டின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மாற்று யோசனைகளையும் முன்வைத்திருந்தது. இதனை,வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் கடன் வழங்குநரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துத் தெரியப்படுத்தி இருந்தனர். இதையடுத்து,எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இரணைமடுக்குளத்தைப் புனரமைப்பதற்குரிய நிதியை இலகு கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்தது.

இரணைமடுக்குள அணைக்கட்டைப் புனரமைத்து கிளிநொச்சி மாவட்டத்துக்கான நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்தும் திட்டம் 5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இவற்றை நிறைவேற்றுவதற்கென 2120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 458 மில்லியன்ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள அணைக்கட்டின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியை வடக்கு விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஐா, வடமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சண்முகானந்தன் உட்பட பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு…

Related Posts