Ad Widget

இரணைமடுகுளத்தின் 11 வான் கதவுகள் திறப்பு

பெய்துவரும் கடும்மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நாளுக்குநாள் உயர்ந்துவந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (22.12.2014) காலை 31அடி 4 அங்குலத்தை எட்டியது.

3

இதையடுத்து அணைக்கட்டுகளின் பாதுகாப்புக்கருதி, குளத்தின் 11 வான்கதவுகளும் காலை 8.30 மணியளவில் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக வான்கதவுகளைத் திறந்து வைத்தார்கள்.

இதையடுத்து இரணைமடுக்குளத்தில் இருந்து பேரிரைச்சலோடு நீர் வெளியேறிவருகிறது. இந்த அரிய காட்சியைக் காண்பதற்காகக் கொட்டும் மழையிலும் ஏராளமானோர் அங்கு கூடி நின்றதைக் காணமுடிந்தது.

இரணைமடுக்குளத்தில் இருந்து அதிவேகமாக நீர் வெளியேறும்போது அனர்த்தங்கள் நிகழலாம் என்பதைக் கருத்தில் கொண்டே, வான்கதவுகள் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குளத்துக்கு வந்துசேரும் நீரின் அளவைவிடக் குறைவாகக் காணப்படுகிறது. நண்பகல் நிலவரப்படி குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் கனவளவு செக்கனுக்கு 2,265.29 கன அடிகளாக இருக்க, குளத்துக்கான நீர்வரத்து செக்கனுக்கு 5920.29 கன அடிகளாக உள்ளது. இதனால்,காலையில் நீர் திறந்துவிடப்பட்டபோது இருந்த குளத்தின் நீர்மட்டத்தை விட நீர்மட்டம் மேலும் உயர்ந்து, தற்போது 32 அடி உயரத்தைகத் தாண்டியுள்ளது.

மேலும் கடும் மழை பொழிந்து நீர்வரத்து அதிகரிக்குமாயின் வான்கதவுகள் முழமையாகத் திறக்கப்படவேண்டிய நிலை உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. வான்கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட நேர்ந்தால், நீர்ப்போக்குப் பாதையில் குடியிருப்புகளை அமைத்துள்ளவர்கள் தற்காலிகமாக இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இத்தகையவர்கள் தங்குவதற்காக அருகில் உள்ள பாடசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படங்களுக்கு…

Related Posts