Ad Widget

இரணைதீவிற்குள் மக்கள் அனுமதி!

கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் இரணைதீவிற்குள் இன்று மக்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர். குறித்த பகுதி விடுவிக்கப்படாத போதும், படகுகளின் மூலம் இன்று காலை பேரணியாக அப்பகுதிக்குச் சென்றனர்.

எனினும், மக்களை கடற்படையினர் தடுக்கவில்லை. இதனையடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ந்ததோடு, அங்கு காணப்படும் தமது கட்டங்கள், மரங்கள் என்பவற்றை ஆரத் தழுவியுள்ளனர்.

இரணைதீவை விடுவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆரம்பித்த போராட்டம் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு இரணைமாதா நகரில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, இரணைதீவு கடற்கரையை அடைந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 50 மீன்பிடிப் படகுகளில் மக்கள் இரணைதீவை நோக்கிப் பயணித்தனர்.

கிறிஸ்தவ மதகுருமார்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

இரணைதீவு பகுதியில் முதற்கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கடற்படையினர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும், பாதுகாப்பை காரணங்காட்டி அந்நடவடிக்கை பிற்போடப்பட்டது.

மேலும், அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடையும் என்றும் குடிநீர் பிரச்சினை காரணம் என்றும் கடற்படையினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு கோரி, கடந்த ஒரு வருடகாலமாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts