Ad Widget

இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான வழிமுறைகளை இலகுபடுத்துக! – கூட்டமைப்பு

இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளவர்கள், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடர்பாடுகளைக் களைந்து அதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

suresh

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாகவும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாகவும் பொருளாதார நோக்கங்கள் கருதியும் இந்நாட்டுப் பிரஜைகள் லட்சக்கணக்கானோர் வெளிநாடு சென்று அந்த நாட்டுப் பிரஜைகளாக மாறியுள்ளனர்.

முன்னர் இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜைகளாக இருப்பவர்கள் மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதில் ஒரு இலகுவான நடைமுறை பின்பற்றப்பட்டது.

ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வது என்பது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் அத்தகைய குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை மிகவும் கடினமானதாக மாற்றப்பட்டது.

வெளிநாடுகளில் சிங்களர், தமிழர், இஸ்லாமியர் என இலங்கையின் சகல இனத்தவரும் அந்தந்த நாட்டுப் பிராஜவுரிமையுடன் வாழ்ந்துவருகின்றனர்.

அதுமட்டுமன்றி, இவ்வாறு வாழ்பவர்களின் தொகை மில்லியனுக்கும் மேலாக இருக்கின்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது உழைப்பின் பெரும்பகுதியை தமது தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

அதுமாத்திரமல்லாமல், இவர்கள் பிறப்பால் இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் இலங்கைப் பிரஜாவுரிமையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அரசு வகுத்திருக்கும் மிகக் கடினமான வழிமுறை என்பது அர்த்தமற்றதும் எமது சொந்த நாட்டு மக்களைக் கேவலப்படுத்துவதும், நாட்டிற்குள் வரக்கூடிய பெருந்தொகையான முதலீடுகளையும் அந்நியச் செலாவணியையும் ஒதுக்கித் தள்ளுவதுமாகவே அமைகின்றது.

எனவே, அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களது சுயமரியாதையை மதிக்கும் வகையிலும், இரட்டைக் குடியுரிமைக்கான இலங்கையின் வழிமுறைகள் இலகுபடுத்தப்பட வேண்டும்.- என்றுள்ளது.

Related Posts