வடக்கு, கிழக்கில் காணாமல்போகச் செய்யப்பட்டோர் மற்றும் நாட்டில் இரகசிய முகாம்கள் எங்கு இருக்கின்றன என்பது தொடர்பில் அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.
அத்துடன், காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என யாழில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிஙக் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கவின் புத்திக பத்திரண எம்.பியால் கொண்டுவரப்பட்ட ‘வடக்கு, கிழக்கில் காணாமல்போன தமிழ் மக்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல்’ தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“யுத்தத்தாலும், சுனாமியாலும் வெள்ளை வானாலும் வடக்கு, கிழக்கில் பெருமளவானோர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரின் பேச்சை நம்பி, வடக்கிலுள்ள பெற்றோர்களும், உறவினர்களும் தமது உறவுகளை தமது கண்முன்னே படையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களின் நிலை என்ன என்று தெரியாது.
காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பரணகம ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் விசாரணை நடத்தியது. இதன்போது, காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என்றும் அந்த ஆணைக்குழுவின் பொறுப்பாளர் காணாமல்போகச் செய்யப்பட்டடோரின் உறவினர்களிடம் கூறியுள்ளார். விசாரணை முடியும் முன்னர் ஆணைக்குழு இவ்வாறு கூறுவதை ஏற்கமுடியாது.
இதேவேளை, இரகசிய முகாம்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டும். காணாமல்போகச் செய்யப்பட்டோர் மற்றும் இரகசிய முகாம்கள் குறித்து புதிய அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும்.
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்தவேண்டும். படையினரிடம் தமது கண்முன்னே ஒப்படைக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பான அறிக்கையொன்றை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்” – என்றார்.