Ad Widget

இரகசிய முகாம்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடவும் – டக்ளஸ்

இலங்கையில் இரகசிய முகாம்கள் இருக்கின்றன என்றால் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். நகரத்திலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் திருகோணமலை கடற்படை தளத்துடன் இரகசிய முகாம்கள் உள்ளன என்றும் அங்கு தமிழ் இளைஞர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்’ என்றார்.

‘இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்ட போது, அப்படி ஒரு முகாமும் இல்லை என மறுத்துள்ளார். இதே கேள்வியை நாடாளுமன்றத்தில் கேட்டபோதும் அங்கும் மறுப்பு தெரிவித்தார்.

அப்படி ஒரு இரகசிய முகாம் இருப்பதாக கூட்டமைப்பில் உள்ளவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றார்கள். தம்மிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறுகின்றார்கள்.

அப்படி இரகசிய முகாம்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை கூட்டமைப்பினர் வெளிப்படுத்த வேண்டும். அதனை விடுத்து மக்களை ஏமாற்றும் விதமாக பொய்களை கூறக்கூடாது.

தமிழீழ விடுதலை புலிகளும் எம்மை சார்ந்தவர்களே! அவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். இனப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டுள்ளோம். இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட வேளை விடுதலைப் புலிகள் அமைப்பில் 652பேரே களப்பலியாகி இருந்தார்கள்.

ஆனால் முள்ளிவாய்காலில் எண்ணற்ற தமிழ் மக்களும் ஆயிரக்கணக்கான புலிகளும் பலியாகியுள்ளனர். அன்று கிடைத்த அந்த வாய்ப்பினை பயன்படுத்தியிருந்தால் இன்று நாம் இவ்வளவு உயிரிழப்புக்களை இழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.

எமது அணுகுமுறை நடைமுறை சாத்தியமான வழியில் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது ஆகும்’ என்றார்.

Related Posts