இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆப்பிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி தற்கொலை!!

பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத இரகசிய ஒப்பந்தமொன்றின் கீழேயே நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய அரசாங்கத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத ‘எஸ்வத்தினி’ (முன்னர் சுவாசிலாந்து) நாட்டிற்கே குறித்த நபர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக பி.பி.சி (BBC) செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

கடுமையான மனநலப் பாதிப்பால் பீடிக்கப்பட்டிருந்தவரும், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டவருமான 35 வயதான கிஷாந்த் பெரமாலியா என்ற குறித்த நபர், எஸ்வத்தினி நாட்டிற்கு அனுப்பப்பட்டு சில மாதங்களின் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட வரைவு ஒப்பந்தத்தின் பிரதியொன்று பி.பி.சி செய்திச் சேவைக்குக் கிடைத்துள்ள நிலையில், அதற்கமைய அவரை மீளக் குடியேற்றுவதற்கான செலவுகளை மூன்று வருடங்கள் வரை ஏற்பதற்குப் பிரித்தானியா இணங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் உயிரிழக்கும் போதும், அவரை அந்நாட்டில் நிரந்தரமாகக் குடியேற்றுவது தொடர்பான திட்டங்களைப் பிரித்தானிய அரசாங்கம் இறுதி செய்து கொண்டிருந்ததாக பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தினால் அகதியொருவர் இவ்வாறு பலவந்தமாக வேறொரு நாட்டில் நிரந்தரமாகக் குடியேற்றப்படுவதற்காக அனுப்பப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனக் குறிப்பிடப்படுகிறது.

2021-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து கனடா நோக்கி கடல் மார்க்கமாகப் பயணித்துக் கொண்டிருந்த போது, பிரித்தானிய அரச கடற்படையினரால் இந்து சமுத்திரத்தில் வைத்து பெரமாலியா உள்ளிட்ட இலங்கை அகதிகள் குழுவொன்று மீட்கப்பட்டது.

பின்னர் அவர்கள் பிரித்தானிய – அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ள ‘டியேகோ கார்சியா’ (Diego Garcia) தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீண்டும் இலங்கைக்குச் செல்வதற்குப் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய அதிகாரிகள், அவர்களுக்கு அகதிப் பாதுகாப்பு வழங்கிய போதிலும், மூன்று வருடங்களாக அவர்களை அத்தீவில் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாகப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இளமைப் பருவத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகளினால் சித்திரவதைக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளானதாகவும், அதன் காரணமாகத் தான் கடுமையான உளவியல் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

டியேகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது மனநிலை மேலும் மோசமடைந்திருந்ததுடன், அவர் பல தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் தாக்குதல் நடத்தியமை, தீ வைத்தமை மற்றும் நான்கு பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

2024 டிசம்பர் மாதத்தில் அத்தீவிலிருந்த பெரும்பாலான இலங்கை அகதிகளுக்குப் பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்ட போதிலும், பெரமாலியாவின் குற்றப் பதிவுகள் காரணமாகப் பிரித்தானிய அமைச்சர்கள் அவரைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டனர்.

பின்னர் 2026 பெப்ரவரி மாதத்தில் ஈரானுடனான போருக்காக அமெரிக்கா டியேகோ கார்சியா தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த தேவையற்ற நபர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய மார்ச் மாத இறுதியில் 30 நாட்கள் காலப்பகுதிக்கு மாலைத்தீவிற்கு அனுப்பப்பட்ட அவர், அதன் பின்னர் ஆப்பிரிக்காவின் எஸ்வத்தினி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டில் தனிமையான வீடொன்றில் தனியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கடுமையான தனிமையாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தினமும் சுமார் நான்கு தடவைகள் தனக்குத் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியதாகவும் இந்தியாவில் வசிக்கும் அவரது சகோதரி பி.பி.சி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

அவரை நிரந்தரமாக அந்நாட்டில் குடியேற்றும் திட்டம் குறித்துத் தனது குடும்பத்தில் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் கடந்த செப்டெம்பர் 13-ஆம் திகதி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, உலகின் தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் குற்றவாளிகளையும் கொட்டும் “குப்பைத் தொட்டியாக” ஆப்பிரிக்காவைப் பிரித்தானியா பயன்படுத்துவதாக எஸ்வத்தினி நாட்டின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர், பிரித்தானியப் பொதுமக்களின் பாதுகாப்பே தமது முன்னுரிமை எனவும், பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டுக் குற்றவாளிகள் பிரித்தானியாவிற்குள் நுழைவதைத் தடுப்பதற்குத் தேவையான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts