Ad Widget

இயற்கை கிருமிநாசினி மூலம் அல்லைப்பிட்டியில் விவசாயம்!

செயற்கை உரங்கள், கிருமிநாசினிகள் மூலம் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் மரக்கறி, பழங்கள் நஞ்சுத்தன்மையாகி வரும் சூழலில் இயற்கை உரங்கள், இயற்கை கிருமி நாசினிகள் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார் அல்லைப்பிட்டி விவசாயி ஒருவர்.

allaipitty

அண்மையில் யாழ் . பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கண்காட்சியில் இயற்கை உரம், இயற்கை கிருமிநாசினி, இயற்கை பசளை போன்றவற்றை காட்சிப்படுத்திய அல்லை விவசாயி கிரிசன் அவைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகளையும் விளங்கப்படுத்தினார் . இயற்கை வள உற்பத்தியை குறித்து விவசாயி கிரிசன் தெரிவிக்கையில்

நாம் இன்று எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகளாக சுத்தமான நீர், நஞ்சற்ற உணவு , தூய்மையான சுற்றாடல் என்பன கருதப்படுகின்றன. அந்த வகையில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் மரக்கறிவகைகள் உணவுப் பொருட்களில் அதிகளவு இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளமையினால் எமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.

புதிய புதிய நோய்கள் எம்மை பீடிக்கின்றன. நமது விவசாய உற்பத்திகளில் அதிகளவு கிருமி நாசினிகள் இரசாயன உரங்கள் உபயோகப்படுத்தப்பட்டு குறைந்த நிலப்பரப்பில் கூடிய விளைச்சலை பெறும் பொருட்டு செயற்படுவதாலும் கிருமிநாசினி விசிறிய பின் அறுவடைக்கு இருக்கவேண்டிய இடைவெளிக் காலத்தை சரியாக கடைப்பிடிக்காமையினாலும் மரக்கறி வகைகளில் நச்சுத்தன்மை காணப்படுகின்றது. அதை வாங்கி உண்ணும் மக்கள் பல விதமான உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இவ்விடயத்தில் கவனமெடுக்கப்படாவிட்டால் எம் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை இயற்கையான முறையில் உ ற்பத்தி செய்வதற்கு எம்மைத் தயார்படுத்த வேண்டும். நாம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரசாயன கிருமிநாசினிகளின் பாவனையை தவிர்த்து இயற்கையான தாவர பீடை நாசினிகளை பயன்படுத்துவதன் மூலம் உணவுப்பொருட்களில் நஞ்சு கலப்பதை தவிர்த்துக்கொள்ளலாம்.

தாவர பீடை நாசினி தயாரிப்பில் மாட்டுச்சலம் பெரும் பங்கு வகிப்பதாலும் இயற்கைப் பசளை கிடைப்பதில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிப்பதாலும் கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் ஒருங்கிணைத்து செய்வதன் மூலம் இயற்கைப் பசளை பெரிய அளவில் கிடைப்பதுடன் தோட்டத்தில் கிடைக்கும் புற்கள், கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்த முடியும். இரசாயனப் பசளைகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியமையாலும் யாழ் குடாநாட்டு நிலத்தடி நீர்வளமும் நிலவளமும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாம் இரசாயன பசளைகள் பயன்படுத்துவதைக் குறைப்பதன் மூலம் எமது நீர் வளத்தையும் நிலவளத்தையும் பாதுகாக்கலாம். இவ்விடயம் தொடர்பில் நான் எனது கிராமமான அல்லைப்பிட்டியில் ஓருங்கிணைந்த சேதன விவசாயத்தை மேற்கொண்டு அரசின் ‘ நஞ்சற்ற உணவு உற்பத்தி ஆண்டுக் கொள்கைக்கு’ வலுச்சேர்க்கவுள்ளேன்.
எமது முன்னோர்கள் கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் ஓருங்கிணைத்து மேற்கொண்டு நோயற்ற சுகதேகிகளாக வாழ்ந்து காட்டியுள்ளனர். அந்தவகையில் பழைமையையும் புதிய தொழில்நுட்பங்களையும் கலந்து விவசாயத்தை செய்வதன் மூலம் நச்சுத் தன்மையற்ற உணவினை உற்பத்தி செய்வதுடன் கூடிய விளைச்சலையும் பெறலாம் என்பது எனது கருத்தாகும் எனத் தெரிவித்தார்.

Related Posts