Ad Widget

இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் வடக்கில் காணிகள் அபகரிப்பு

வடக்கில் இராணுவத்துக்கென்று ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதேசமயம், இன்னொருபுறம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளளார்.

மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29.04.2016) விவசாயிகளுக்கான நடுகைப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்ச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மன்னார் மாவட்டத்தில் விளையும் விளாம்பழங்கள் தனித்துவமான சுவையுடையவை. இதனால், மன்னாரில் வெற்றுக்காணிகளில் பெரிய அளவில் விளாமரத் தோப்புகளை உருவாக்க வேண்டும் என்று விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் நான் சொல்லியிருந்தேன். அதன் அடிப்படையில் அவர்கள் ஏழாயிரம் விளாமரக் கன்றுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், அவற்றை நடுகை செய்வதற்கு நாங்கள் இப்பொழுது காணிகளைத் தேடவேண்டியிருக்கிறது.

மன்னாரில் வன ஜீவராசிகள் திணைக்களம் தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 29,180 ஹெக்டயர் பரப்பளவை விடத்தல்தீவு இயற்கை ஒதுக்கிடம் என வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது சூழலியல் முகமூடி அணிந்துகொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு நில அபகரிப்பு.
தேசியப் பூங்காக்களுக்கும் இயற்கை ஒதுக்கிடங்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. தேசியப் பூங்காவினுள் நுழைய பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. அதேபோன்று, சரணாலயங்களுக்குள் நுழைவதற்கும் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் இயற்கை ஒதுக்கிடங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை. இதனால், இவ்வாறு இயற்கை ஒதுக்கிடங்கள் என்று ஒதுக்கப்படும் இடங்களுக்குள் நாங்கள் எதனையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாகர் கோவில் இயற்கை ஒதுக்கிடம் என்ற பெயரில் 7882 ஹெக்டயர் காணி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களின் வயல் நிலங்கள், தென்னம் தோப்புகள், குடியிருப்புகளும் உள்ளடங்கியுள்ளன. பொதுமக்கள் தங்கள் எதிர்பார்ப்பை வெளிக்காட்டியதன் பின்னர், வனஜீவராசிகள் அமைச்சு இது தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய இப்போது இணங்கியிருக்கிறது.

இதுபோன்ற விழிப்புணர்வு மன்னாரிலும் ஏற்பட வேண்டும். பறவைகள், விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்கள் எல்லோருக்கும் கரிசனை உண்டு. ஆனால், சூழலின் பெயரால் நிகழும் சூழலியல் ஏகாதிபத்தியத்தை நாம் பார்த்துக்கொண்டு வாழாதிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநோ நோகராதலிங்கம், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

06

05

04

03

02

Related Posts